சனி, 22 ஆகஸ்ட், 2015

காஞ்சிபுரம் இட்லி + கொத்ஸு

தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி(இட்லி) ஒரு கிண்ணம்
பச்சை அரிசி ஒரு கிண்ணம்
முழு உளுந்து தோல் நீக்கியது ஒரு கிண்ணம்
மூன்றையும் கலந்து களைந்து ஊற வைக்கவும். நான்கு மணி நேரம் ஊறியதும் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ரொம்பவே நைஸாகவும் கூடாது. ரொம்பக் கொரகொரப்பாகவும் கூடாது. ரவை போல் அரைக்கவும்.
சுக்கு, மிளகு, ஜீரகம் ஒன்றிரண்டாக உடைத்துக்கொண்டது இரண்டு டீஸ்பூன், உப்பு, நெய்.
தாளிக்க எண்ணெய் அல்லது நெய், 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உ.பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் (எல்லாம் சேர்த்து) இஞ்சி தேவையானால் ஒரு துண்டு. கருகப்பிலை, கொத்துமல்லிபொடிப்பொடியாக நறுக்கியது இரண்டு டீஸ்பூன்.
ஊற வைத்த பட்டாணி, துருவிய காரட்(தேவையானால் மாவில் கலக்கலாம். இது அவரவர் விருப்பம்போல். தேங்காயும் பல்லுப் பல்லாகக்கீறிச் சேர்க்கலாம்)
இப்போது அரைத்த மாவில் பொடித்த சுக்கு, மிளகு, ஜீரகக்கலவையோடு உப்பையும் போட்டு நெய்யையும் விட்டுக் கலந்து புளிக்க வைக்கவும்.
மறுநாள் இட்லி செய்யும் முன்னர் தாளிக்க எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக்கொண்டு அதில் தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்துக் கொட்டி மாவில் கலக்கவும். தேவையானால் ஊற வைத்த பட்டாணி, காரட், தேங்காய்க் கீறல் சேர்க்கலாம்.
இட்லிப் பாத்திரம் அல்லது இட்லிக்குக்கரில் நீரை ஊற்றிச் சூடாக்கவும். நீர் கொதித்து வந்ததும், இட்லித்தட்டுக்களில் நன்றாகத் ததும்ப எண்ணெய் தடவி மாவை ஊற்றவும். எல்லாத்தட்டுக்களையும் குக்கரினுள் அடுக்கிவிட்டு மூடி வைக்கவும். இட்லி வேகப் பத்து நிமிடங்கள் ஆகும். பின்னர் வெளியே எடுத்து சுவையான சட்னி அல்லது கொத்சோடு பரிமாறவும்.
கொத்சு:
தேவையான பொருட்கள்: புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு ஊற வைத்துக் கரைத்து வடிகட்டிய நீர் இரண்டு கிண்ணம். உப்பு, மிளகாய் வற்றல் 3, பச்சை மிளகாய் 2 அல்லது 3. மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை, பெருங்காயம் ஒரு துண்டு. கடுகு, உ.பருப்பு, கடலைப்பருப்பு, கருகப்பிலை. கத்தரிக்காய் நடுத்தரமாக ஒன்று, சின்ன வெங்காயம் பத்துப் பனிரண்டு, அல்லது ஒரு நடுத்தரப் பெரிய வெங்காயம், தக்காளி ஒன்று. பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தாளிக்க எண்ணெய்.
அடுப்பில் கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளிக்கவும். பின்னர் முதலில் வெங்காயத்தைப் போட்டு வதக்கிவிட்டுப் பின் கத்தரிக்காய், தக்காளி போன்றவற்றையும் போட்டு நன்கு வதக்கவும். மஞ்சள் பொடி சேர்த்துத் தேவையானால் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்க்கவும். புளிக்கரைசலை ஊற்றி உப்புச் சேர்க்கவும். சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கி சூடான இட்லியுடன் பரிமாறவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக