திங்கள், 19 ஜனவரி, 2015

மறந்து போன உணவு



மறந்து போன மருத்துவ உணவுகளும் அதன் மருத்துவ குணங்களும் :-
”’உணவே மருந்து’ என்பதுதான் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்த வாழ்க்கை முறை. நோய் வராமல் காத்துக் கொள்ளவும், வந்த நோயை வழி அனுப்பி வைக்கவும், உணவையே மருந்தாக உண்டு வந்த காலம் போய், இன்று மாத்திரை, மருந்துகளையே உணவாகச் சாப்பிடும் அளவுக்கு ஒரு சிலரின் நிலை மாறிவிட்டது. மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளை மறுபடியும் பழக்கத்துக்குக் கொண்டு வரலாமே…”
பிரண்டைச் சத்துமாவு
---------------------------------
தேவையானவை: நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் – அரை கிலோ, புளித்த மோர் – ஒரு லிட்டர், கோதுமை – ஒரு கிலோ, கறுப்பு எள், கறுப்பு உளுந்து – தலா 100 கிராம்.
செய்முறை: பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும். பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும். இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.
மருத்துவப் பயன்: உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும்.
அஷ்ட வர்க்க உணவுப்பொடி
-----------------------------------------
தேவையானவை: சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், சோம்பு, இந்துப்பு, பெருங்காயம் – தலா 50 கிராம்.
செய்முறை: இந்துப்பு, பெருங்காயம் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் மிதமாக வறுத்துப் பொடிக்கவும். இந்துப்பு, பெருங்காயத்தைத் தனியாகப் பொடித்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கினால், அஷ்ட வர்க்க உணவுப் பொடி ரெடி!
மருத்துவப் பயன்: இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட, நன்றாகப் பசியைத் தூண்டும். குடல் புண், வாய்வுக் கோளாறுகள், பசியின்மை, செரியாமை இவற்றிற்கு எல்லாம் இந்தப் பொடி சிறந்த மருந்து.
இஞ்சிப் பச்சடி
--------------------
தேவையானவை: இஞ்சி – 100 கிராம், புளி – சிறிதளவு, எலுமிச்சை – 4, பெரிய வெங்காயம் – 2, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: தோல் நீக்கிய இஞ்சியுடன் புளி சேர்த்து நன்றாக அரைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினால், இஞ்சிப் பச்சடி தயார்.
மருத்துவப்பயன்: பித்தம், மூட்டு வலி, சளி, இருமல் போக்கும். பசியைத் தூண்டும்.
எள்ளு சாதம்
-------------------
தேவையானவை: புழுங்கல் அரிசி – 450 கிராம், எள், நெய் – தலா 115 கிராம், காய்ந்த மிளகாய் – 5, உளுத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு – தலா 15 கிராம், பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சம்பழம் – அரை மூடி, கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அரிசியை சாதமாக வடித்துக்கொள்ளவும். நெய்யை சூடாக்கி, முந்திரி, கறிவேப்பிலையை வறுத்துத் தனியே எடுத்துவைக்கவும். அதே நெய்யில் எள், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுத்தம் பருப்பு போட்டு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். நெய், எள்ளுப் பொடி, முந்திரி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சாதத்துடன் நன்றாகக் கலக்கினால், எள்ளு சாதம் தயார்!
மருத்துவப்பயன்: ஹார்மோன் குறைபாடால் ஏற்படும் மாதவிடாய்ப் பிரச்னைகளை சரிசெய்து, மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும். சதைபோட விரும்புபவர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம். எலும்பு தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். சளியைப் போக்கும்.
வேப்பங்கொழுந்து துவையல்
-------------------------------------------
தேவையானவை: வேப்பங்கொழுந்து – 30 இணுக்கு, வெல்லம் – 10 கிராம், உளுத்தம்பருப்பு – 20 கிராம், பச்சை மிளகாய் – 2, பூண்டு – 5 பல், எண்ணெய், புளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவை தேவையான அளவு.
செய்முறை: சிறிதளவு எண்ணெயில் வேப்பங்கொழுந்து, உளுத்தம்பருப்பு, பூண்டை வறுத்து, வெல்லம், பச்சை மிளகாய், புளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துத் துவையலாக அரைக்கவும்.
மருத்துவப்பயன்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற துவையல் இது. பித்தம் தணியும். வயிற்றில் உள்ள கிருமிகள் ஒழியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வெள்ளி, 9 ஜனவரி, 2015

பலாப்பழ CAUTIONS

பலாப்பழத்தை சுவைப்பீர்களா? இதோ எச்சரிக்கை
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் பலாப்பழம்.
தனது இனிப்பான சுவையால் அனைவரையும் சுண்டி இழுக்கும் இந்த பழத்தால் சில தீமைகளும் உள்ளன.
எச்சரிக்கைகள்
* பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும்.
* இதை, மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.
* பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்றுவலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும்.
*எனவே, பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும்.
* பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டை ஒன்றினை பச்சையாக மென்று தின்றுவிட்டால் சாப்பிட்டது நன்கு சீரணமாகிவிடும்.
* குடல்வால் அழற்சி எனப்படும் அப்பண்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக் கூடாது.
* சிலர் பலாக்கொட்டையை சுட்டு உண்பார்கள். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் அள்ளுமாந்தம், மலச்சிக்கல், கள் குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்படல், வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.
* மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு சீரணமாகவில்லை என்றால், மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும். இதனை போக்க துவரம்பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகும், பூண்டும் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட தகுந்த நிவாரணம் பெறலாம்.

புதன், 7 ஜனவரி, 2015

குளிர்கால உணவுகள்



குளிர்காலத்திற்கு ஏற்ற சூப்பரான உணவுகள்

குளிர்காலம் என்றாலே நமது உணவு பழக்க 

வழக்கங்களில் கண்டிப்பாக மாற்றம் கொண்டு 

வரவேண்டும்.


குளிர்காலம் என்றாலே சளி, ஜலதோஷம் 

பிடிக்கும் என்பதற்காக பழங்களை 

சாப்பிடுவதையே நிறுத்திவிடுவார்கள்.

இவ்வாறெல்லாம் சரியாக சாப்பிடாமல் 

இருந்தால் உடலை எந்த ஒரு கிருமிகள் 

தாக்கினாலும், அவை எளிதில் உடலில் புகுந்து 

தங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும்.

எனவே நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த 

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் 

கொள்ள வேண்டும்.

பசலைக் கீரை

பசலைக் கீரையில் அதிகளவு சத்துக்கள் 

உள்ளது, இதனை உணவில் சேர்த்து வருவதன் 

மூலம் ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்ந்து நோய் 

தாக்காமல் உடலை பாதுகாக்கும்.

கொய்யாப் பழம்

இந்த பழத்தில் லைகோபைன் என்னும் பொருள் 

இருப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக 

வைக்கிறது.

அனைவராலும் எளிதில் வாங்கி 

உண்ணக்கூடிய 

இப்பழம், அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தியை 

அளிக்கிறது, இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்

குளிர்காலத்தில் சாதாரண பழங்களை 

சாப்பிடுவதை விட, நட்ஸ் மற்றும் உலர் 

பழங்களை சாப்பிடுவதால் உடலில் அதிகளவு 

ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

மேலும் கிருமிகள் எளிதில் தாக்காமல் உடலை 

பாதுகாக்கும்.

கேரட்

கேரட் என்றாலே நம் நினைவுக்கு வருவது 

கண்களுக்கு நல்லது என்பது தான், கேரட்டை 

இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் என்று 

சொல்லலாம். ஏனெனில் அந்த அளவு இதில் 

வைட்டமின்களான பி, சி, டி, ஈ மற்றும் கே 

உள்ளன.

இதில் உள்ள கரோட்டீன என்னும் பொருள் 

உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக 

மாறிவிடுகிறது. எனவே உணவில் கேரட்டை 

சேர்ப்பது அவசியமாகிறது.

கிவி

வைட்டமின் சி நிறைந்துள்ள இப்பழத்தின் மேல் 

சிறிது உப்பை தூவி காலை அல்லது மாலை 

வேளையில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு 

சத்துக்கள் கிடைப்பதுடன், வயிறு நிறைந்து 

இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

ஆரஞ்சு

குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க 

போதிய அளவில் வைட்டமின் சி அவசியமாகும், 

இவற்றை தடுக்க போதிய நோய் எதிர்ப்பு சக்தி 

தேவைப்படுகிறது.

எனவே ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வருவதன் 

மூலம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி 

அதிகரிக்கும்.

வேர்க்கடலை

குளிர்காலத்தில் அதிகம் சாப்பிட வேண்டிய 

உணவுகளில் ஒன்று வேர்க்கடலை, இதனை 

வறுத்ததாகவோ, உப்பாகவோ அல்லது 

சாதாரணமாகவோ எடுத்துக் கொண்டால் 

உடலில் வெப்பம் சரியான அளவு இருப்பதுடன் 

புரோட்டீனும் அதிகம் கிடைக்கும்